இலங்கையின் நிறுவப்பட்ட சூரிய மின்சக்தி உற்பத்தித் திறன் 3,070 மெகாவாட்டை கடந்துள்ளதாக தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் (NSO) தெரிவித்துள்ளது.
வானிலை நிலைமைகளுக்கு ஏற்ப, நாட்டின் நாளாந்த மின்சாரத் தேவையில் சுமார் 15 முதல் 25 சதவீதம் வரை தற்போது சூரிய மின்சக்தி மூலம் பூர்த்தி செய்யப்படுவதாகவும் NSO தெரிவித்துள்ளது.
நெட் மீட்டரிங், நெட் அக்கவுண்டிங் மற்றும் நெட் பிளஸ் திட்டங்களின் கீழ் சுமார் 2,542 மெகாவாட் கூரை சூரிய மின்சக்தி தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும், தரையில் நிறுவப்பட்ட சூரிய மின்சக்தி திட்டங்கள் மூலம் 534 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறன் கிடைக்கிறது.
ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள கூரை மற்றும் தரையில் நிறுவப்படும் சூரிய மின்சக்தி திட்டங்கள் மூலம் மாதத்திற்கு மேலும் 25 முதல் 30 மெகாவாட் வரை சூரிய மின்சக்தி திறன் சேர்க்கப்பட்டு வருவதாகவும் NSO குறிப்பிட்டுள்ளது.
2027 முதல் 2029 வரையான காலப்பகுதியில் மேலும் 1,392 மெகாவாட் சூரிய மின்சக்தி திறனை இணைக்க NSO திட்டமிட்டுள்ளது. இதில் 500 மெகாவாட் கூரை சூரிய மின்சக்தி, 442 மெகாவாட் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான திட்டங்கள் மற்றும் 450 மெகாவாட் பாரிய சூரிய மின்சக்தி பூங்காக்கள் அடங்குகின்றன.
இதே காலப்பகுதியில் சுமார் 1,240 மெகாவாட் / 4,660 மெகாவாட் மணி கொள்ளளவு கொண்ட மின்கல ஆற்றல் சேமிப்பு கட்டமைப்பையும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும், சூரிய மின்சக்தி வேகமாக அதிகரித்து வருவதாலும், தற்போதுள்ள தொழில்நுட்ப வரம்புகள் காரணமாகவும் 2026ஆம் ஆண்டுக்காக எதிர்பார்க்கப்பட்ட கூரை சூரிய மின்சக்தி இணைப்புகள் ஏற்கனவே இலக்கை கடந்துள்ளதாக NSO தெரிவித்துள்ளது.
இதனால், EDL மற்றும் LECO உள்ளிட்ட மின்சார விநியோக உரிமம் பெற்ற நிறுவனங்கள் புதிய கூரை சூரிய மின்சக்தி அனுமதிகள் மற்றும் திறன் அதிகரிப்புகளை நெருக்கமாக கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அபிவிருத்திக்கு நீண்டகால கட்டுப்பாடாக அல்லாமல், மின் கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தற்காலிக நடவடிக்கையாகும் என NSO தெரிவித்துள்ளது.
பகல் நேரத்தில் உற்பத்தி செய்யப்படும் சூரிய மின்சக்தியை மின்கலங்களில் சேமித்து, மாலை மற்றும் இரவு நேரங்களில் பயன்படுத்த அனுமதிக்கும் ‘Zero-Export’ சூரிய மின்சக்தி இணைப்புகளுக்கு இந்த வரம்புகள் பொருந்தாது.
மேலும், நெட் பிளஸ் திட்டத்தின் கீழ் புதிய விண்ணப்பங்கள் தொடர்ந்து ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் NSO தெரிவித்துள்ளது.
செப்டெம்பர் 11, 2026ஆம் திகதிக்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்ட அனைத்து சூரிய மின்சக்தி திட்டங்களும், அவற்றின் தற்போதைய அனுமதிகளில் எந்த மாற்றமும் இன்றி தொடர அனுமதிக்கப்படும் என NSO மேலும் குறிப்பிட்டுள்ளது.








