பன்னேகமுவ மற்றும் திஸ்ஸமஹாராம பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது, யானைத்தந்தம் மற்றும் கறுப்புப் பவளத்தால் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பல நகைகளை வனவிலங்கு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
யானைத்தந்தத்தில் செய்யப்பட்ட நகைகள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், செப்டெம்பர் 19ஆம் திகதி பன்னேகமுவ பகுதியில் வனவிலங்கு அதிகாரிகள் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட பதக்கமொன்றை விற்பனை செய்வதற்கு தயாராக இருந்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, 100,000 ரூபாய் தனிப்பட்ட பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, அன்றைய தினம் திஸ்ஸமஹாராம பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றிலும் வனவிலங்கு அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
இதன்போது, யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட பதக்கமொன்றும் காப்பு ஒன்றும், கறுப்புப் பவளத்தால் செய்யப்பட்ட 9 பதக்கங்களும், சிப்பிகளால் செய்யப்பட்ட 2 பதக்கங்களும், கடையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த 9 சிப்பிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
நகைக்கடையுடன் தொடர்புடைய சந்தேகநபர் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 500,000 ரூபாய் தனிப்பட்ட பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இரு வழக்குகளும் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.








