மறைந்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை ஒரு தனிநபரை மாத்திரம் இலக்காகக் கொண்டதல்ல எனவும், அரசியல்வாதிகள், ஊழல் மற்றும் சக்திவாய்ந்த நலன்களுக்கு எதிராக கேள்வி எழுப்பத் தயாராக இருந்த ஊடகவியலாளர்கள் மற்றும் தொழில்முறையாளர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதே அதன் நோக்கமாக இருந்ததாகவும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் (CIABOC) பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
விக்கிரமதுங்க தொடர்பான நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய அவர், லசந்தவின் படுகொலை ஊடகவியலாளர்களுக்கு பரந்தளவிலான எச்சரிக்கையை வழங்கியதாகக் குறிப்பிட்டார்.
“லசந்தவை மாத்திரம் அகற்றுவதற்காகவே அவர் கொல்லப்பட்டார் என நினைக்கிறீர்களா? லசந்தவைப் போன்ற அனைவருக்கும் அது ஒரு செய்தியாக இருந்தது” என அவர் தெரிவித்துள்ளார்.
ஊழல் அல்லது நிலைநாட்டப்பட்ட அதிகார நலன்களுக்கு சவால் விடுத்தவர்களுக்கு இலங்கையின் வரலாற்றில் இதுபோன்ற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் ரங்க திஸாநாயக்க கூறினார்.
பேராசிரியர் சேனக பிபிலே மற்றும் சுங்க அதிகாரி சுஜித் பிரசன்ன ஆகியோரின் சம்பவங்களையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகும்போது, அவருடன் பணியாற்றுவோர், குடும்பத்தினர் மற்றும் ஏனையவர்கள் தவறுகளை எதிர்த்து செயல்படுவது தங்களது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா என கேள்வி எழுப்பத் தொடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுங்க அதிகாரி கொல்லப்பட்ட பின்னர், அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய சிலர் நாட்டை விட்டு வெளியேறியதாகவும், மேலும் சிலர் விசாரணைகளை முன்னெடுக்க தயக்கம் காட்டியதாகவும் ரங்க திஸாநாயக்க தெரிவித்தார்.
சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், “லசந்த கொல்லப்பட்டாலும் மேலும் பல லசந்தாக்கள் உருவானால், அவர்களின் நோக்கம் தோல்வியடையும். ஆனால் லசந்த கொல்லப்பட்ட பின்னர் பலர் அடக்கப்பட்டனர். அப்போது அவர்களின் நோக்கம் நிறைவேறுகிறது” எனத் தெரிவித்தார்.
கொல்லப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மாத்திரம் தொடர்ந்து இந்தச் சுமையை சுமக்க வேண்டுமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார். லசந்த விக்கிரமதுங்கவின் முன்னாள் மனைவி ரெய்ன் விக்கிரமதுங்க மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி தொடர்பாகவும் அவர் குறிப்பிட்டார்.
தவறுகளை வெளிப்படுத்துபவர்களை அச்சுறுத்தும் முயற்சிகள் இறுதியில் தோல்வியடைவதை உறுதி செய்வதா அல்லது மௌனமாக இருப்பதா என்பதை சமூகமே தீர்மானிக்க வேண்டும் எனவும் ரங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.








