22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாகவும், இதன் மூலம் நாட்டின் 220 இலட்சம் மக்களின் ஜனநாயக உரிமை இழக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (25) இடம்பெற்ற 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான வாக்கெடுப்பின் பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“இன்று ஜனநாயகத்திற்கு ஒரு இருண்ட யுகம் உருவாகியுள்ளது. ஜனநாயகத்தை அழித்து, ஜனநாயகத்தைச் சுருக்கும் சர்வாதிகார அரசாங்கத்திற்கு அடித்தளமிட்டு, தனிக்கட்சி ஆட்சியை முன்னெடுக்கும் நடவடிக்கையை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது” என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவரையும், நாட்டின் பெரும்பான்மையான மக்களையும் ஒன்றுதிரட்டி, மக்களுக்கு விரோதமானதும் ஜனநாயகத்திற்கு எதிரானதுமான தற்போதைய அரசாங்கத்தைத் தோற்கடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைமையகத்திலிருந்து நிர்வகிக்கப்படும் நாடாக அல்லாமல், ஜனநாயகம் பாதுகாக்கப்படும் நாடாக இலங்கை இருக்க வேண்டும் எனவும், இதற்காக ஐக்கிய மக்கள் சக்தி அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.







