நாட்டின் பல பகுதிகளில் இன்றும் (26) மழையுடன் கூடிய வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். எனவே, அவற்றால் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடற்பரப்புகளில் எச்சரிக்கை
சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 30–40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50–60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும்.
மேலும், புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் சுமார் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் குறித்த கடற்பரப்புகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.








