மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முதன்முறையாக சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவு இன்று (24) புதிதாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் சிறுவர்களுக்கு தனித்துவமானதும் உயர்தரமானதுமான அதிதீவிர சிகிச்சைகளை வழங்கும் நோக்கில் இந்தப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரிவை அமைப்பதற்காக பல்வேறு வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட வைத்தியசாலையின் அனைத்து ஊழியர்களும் தங்களது முழுமையான ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்கியுள்ளனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் முரளீஸ்வரனின் முயற்சியில் இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.
திறப்பு விழாவில் சிறுவர் நல வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சிறுவர் நல வைத்தியச் சிகிச்சைத் துறையில் இந்தப் பிரிவு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
வைத்தியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்தச் சேவை திறம்பட முன்னெடுக்கப்படும் எனவும், எதிர்காலத்தில் வைத்தியசாலையில் மேலும் பல புதிய வைத்தியப் பிரிவுகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் தெரிவித்தார்.








