நுவரெலியா மாவட்ட செயலகத்தின் அதிகாரபூர்வ கடிதத் தலைப்புகள் மற்றும் முத்திரைகளைப் போலியாகத் தயாரித்து, அரசாங்க வேலைவாய்ப்புகள், வீடுகள் மற்றும் கடன்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி பிரதேசவாசிகளிடம் பணம் வசூலித்த ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுவரெலியா பிராந்திய குற்றவியல் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 70 வயதுடைய ஒருவரும், நுவரெலியா, ஹட்டன் மற்றும் கொட்டகலை பகுதிகளில் தொடர்பாடல் நிலையங்களை (Communication Centres) நடத்தி வந்தவர்களும் அடங்குகின்றனர்.
நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் மற்றும் அந்த அலுவலகத்தின் பதில் கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரின் பெயர்களைப் பயன்படுத்தி, அவர்களின் போலி கையொப்பங்களுடன் சந்தேகநபர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அதிகாரிகளின் போலி கையொப்பங்களைப் பயன்படுத்தி, பணம் வழங்கியவர்களுக்கு சந்தேகநபர்கள் வழங்கிய சில கடிதங்களுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என தெரிவித்து மாவட்ட செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதங்கள் பரிசீலிக்கப்பட்டபோதே, குறித்த கடிதத் தலைப்புகள் மற்றும் கையொப்பங்கள் போலியானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மாவட்ட செயலாளரால் நுவரெலியா பிராந்திய குற்றவியல் பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஹட்டன் மற்றும் கொட்டகலை பகுதிகளைச் சேர்ந்த மேலும் சிலரின் உதவியுடன் சந்தேகநபர்கள் பிரதேசவாசிகளிடம் பணம் பெற்றுக்கொண்டதுடன், பணம் வழங்கியதை உறுதிப்படுத்தும் வகையில் போலி முத்திரையிடப்பட்ட கடிதங்களையும் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து போலி முத்திரைகள், கடிதத் தலைப்புகள் மற்றும் அவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட கணினிகள் உள்ளிட்டவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன், தனது பெயரையும் மேலதிக மாவட்ட செயலாளரின் பெயரையும் பயன்படுத்தி பல்வேறு விழாக்களை ஏற்பாடு செய்வதாகக் கூறி பிரதேசவாசிகளிடம் பணம் திரட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
குறித்த விழாக்களில் தாம் கலந்துகொள்ளவுள்ளதாகக் கூறிவிட்டு, பின்னர் தவிர்க்க முடியாத காரணங்களால் கலந்துகொள்ள முடியவில்லை என தொலைபேசி மூலம் அறிவித்து, கூட்டங்களை நடத்துமாறு தெரிவிக்கும் முறையையும் சந்தேகநபர்கள் பயன்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுவரெலியா பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில், பிராந்திய குற்றவியல் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








