இலங்கையில் நீர் வெறுப்பு நோயை (Rabies) முழுமையாக ஒழித்தல், நாய்களைப் பதிவு செய்தல் மற்றும் அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட நோக்கங்களுடன் புதிய சட்டமூலம் ஒன்று இன்று (24) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்னவினால் குறித்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது.
நாட்டிலிருந்து நீர் வெறுப்பு நோயை முற்றாக ஒழிக்கும் நோக்கில் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்துதல் மற்றும் அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றை முறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இதில் முன்மொழியப்பட்டுள்ளன.
மேலும், வணிக நோக்கங்களுக்காக நாய்களைப் பெருக்குவதைக் கடுமையாக ஒழுங்குபடுத்துதல் மற்றும் நாய்களைப் பதிவு செய்வதற்கான முறையான அமைப்பை உருவாக்குதல் ஆகியவையும் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நீர் வெறுப்பு நோயை ஒழிப்பதற்கான தேசிய ஆலோசனைக் குழு மற்றும் பிரதேச ஆலோசனைக் குழுக்களை அமைப்பதற்கான ஏற்பாடுகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
இதனுடன், தற்போது நடைமுறையில் உள்ள 476ஆம் அதிகாரமான நீர் வெறுப்பு நோய் தொடர்பான கட்டளைச் சட்டம் மற்றும் 477ஆம் அதிகாரமான நாய்கள் பதிவு தொடர்பான கட்டளைச் சட்டம் ஆகியவற்றை நீக்குவதற்கும் சட்டமூலம் வழிவகுக்கிறது.
இச்சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு நாளை (25) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.








