களு கங்கை ஆற்றுப் படுகையின் குடா கங்கை உப ஆற்றுப் படுகைக்கான வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணிநேரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, அபாயம் ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிப்பவர்களும், அந்தப் பகுதிகளூடாக பயணிக்கும் வாகன சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குடா கங்கை உப ஆற்றுப் படுகையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பதிவான குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி மற்றும் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிக்கும் நிலைமை காரணமாக, செப்டம்பர் 20ஆம் திகதி காலை 9.30 மணியளவில் முதலில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
களு கங்கை ஆற்றின் நீரியல் நிலையங்களில் பதிவான மழைவீழ்ச்சி மற்றும் நீர்மட்ட நிலைமைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகளின்படி, குடா கங்கை மற்றும் மகுரு கங்கை பள்ளத்தாக்குகளின் தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள நிலை ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்த நுவர பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகள் வெள்ள அபாயம் ஏற்படக்கூடிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும், குடா கங்கை மற்றும் மகுரு கங்கை வெள்ளப்பெருக்கு நிலப்பரப்புகளின் ஊடாகச் செல்லும் வீதிகள் நீரில் மூழ்குவதற்கான அதிக சாத்தியம் காணப்படுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த பகுதிகளில் வசிப்பவர்களும் அவற்றின் ஊடாகப் பயணிக்கும் வாகன சாரதிகளும், குறிப்பாக சிறிய வீதிகளைப் பயன்படுத்தும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








