அப்ரா அன்சார்
கொழும்பு – 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை அமைப்புகள் திருத்தச் சட்டமூலம் ஆகியவற்றின் இரண்டாம் வாசிப்பு மீதான நாடாளுமன்ற விவாதம் இன்று (24) ஆரம்பமாகவுள்ளது.
இவ்விரு சட்டமூலங்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அதன்படி, 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை எனவும், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்ற முடியும் எனவும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அதேவேளை, நீதித்துறை அமைப்புகள் திருத்தச் சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இவ்விரு சட்டமூலங்கள் தொடர்பான விவாதம் இன்று (24) மற்றும் நாளை (25) நடைபெறவுள்ளதுடன், நாளை மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இதேவேளை, 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை அமைப்புகள் திருத்தச் சட்டமூலம் ஆகியவற்றுக்கு பொது நிர்வாகம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக தலைமையில் நடைபெற்ற இக்குழுக் கூட்டத்தில், குறித்த இரு சட்டமூலங்கள் தொடர்பாக சட்டமா அதிபர் குழுவினருக்கு விளக்கமளித்ததாக நாடாளுமன்றத் தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.








