தமிழ்-கனேடிய நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணனின் சர்வதேச சாதனைகளை இலங்கையர்கள் பெருமையுடன் கொண்டாட வேண்டும் என யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இன வேறுபாடுகளைக் கடந்து இலங்கையர்கள் அனைவரும் மைத்ரேயி ராமகிருஷ்ணனின் வெற்றியைப் பெருமையாகக் கருத வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
அத்துடன், நடிகை மற்றும் அவரது படைப்புகள் தொடர்பில் சில சிங்கள சமூக ஊடகப் பயனர்கள் வெளியிட்டதாகக் கூறப்படும் இனவாதக் கருத்துகளையும் அவர் விமர்சித்தார்.
இவ்வாறான கருத்துகளை வெளியிடுவதைத் தவிர்த்து, சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்றுள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர்களின் சாதனைகளை அங்கீகரிக்குமாறு சிங்கள சமூக ஊடகப் பயனர்களிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.
மைத்ரேயி ராமகிருஷ்ணனின் புதிய Netflix திரைப்படமான ‘Best of the Best’ தொடர்பில் இணையத்தில் எதிர்மறையான எதிர்வினைகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், அர்ச்சுனாவின் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.
திரைப்படத்தின் விளம்பர நடவடிக்கைகளின்போது தனது தமிழ் மற்றும் இலங்கை வம்சாவளி குறித்து மைத்ரேயி ராமகிருஷ்ணன் பேசியதைத் தொடர்ந்து சர்ச்சை தீவிரமடைந்ததாகவும், சில சமூக ஊடகப் பக்கங்களில் திரைப்படத்திற்கு எதிர்மறையான மதிப்பீடுகள் மற்றும் விமர்சனங்களை வழங்குமாறு கோரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நடிகையை இலக்காகக் கொண்டு சமூக ஊடகங்களில் அவமதிக்கும் வகையிலான கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைத் தமிழ் பெற்றோருக்குப் பிறந்து கனடாவின் ஒன்ராறியோ மிசிசாகாவில் வளர்ந்த மைத்ரேயி ராமகிருஷ்ணன், Netflix தொடரான ‘Never Have I Ever’ இல் தேவி விஸ்வகுமார் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சர்வதேச அளவில் பிரபலமானார்.








