இலங்கையின் முன்னணி இந்து அமைப்புகளின் குருமார்கள் மற்றும் பிரதிநிதிகள், இன்று (23) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைமையகத்திற்கு வருகை தந்து, ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் முக்கிய சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.
நபி முஹம்மத் (ஸல்) அவர்களை நிந்தனை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சவூதி அரேபிய நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் என்பவரின் மன்னிப்பு மற்றும் விடுதலை தொடர்பில், சவூதி அரேபிய அரசாங்கத்திடம் ஜம்இய்யா சார்பில் கோரிக்கை முன்வைக்குமாறு இந்தச் சந்திப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதன்போது, குறித்த நபரின் பக்குவமற்ற செயலுக்காக வருகை தந்த குருமார்களும் பிரதிநிதிகளும் தங்களது வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்ததுடன், இவ்வாறான தவறான செயற்பாடுகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் குறிப்பிட்டனர்.
எனினும், அறியாமையினால் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படும் இந்தத் தவறை கருத்திற்கொண்டு, குறித்த நபரை மன்னித்து விடுதலை செய்வதற்கு அல்லது அவருக்கான தண்டனையை குறைப்பதற்கு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தம்மால் இயன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பான மகஜர் ஒன்றும் ஜம்இய்யத்துல் உலமா தரப்பிடம் கையளிக்கப்பட்டது.
மேலும், பல்லின சமூகங்கள் வாழும் இலங்கையில் சகவாழ்வு, இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
சமய அமைப்புகள் என்ற வகையில் அனைத்து தரப்பினரும் இணைந்து இதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்தச் சந்திப்பில் அகில இலங்கை இந்து மாமன்றம், சர்வதேச இந்து மகா சபை, இலங்கை பிராமணர் குருக்கள் சங்கம், இந்து குருமார்கள் சங்கம் மற்றும் சர்வதேச இந்து மத பீடம் ஆகிய அமைப்புகளின் குருமார்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
ஜம்இய்யா சார்பில் உப தலைவர், பொதுச் செயலாளர், உப செயலாளர், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோருடன் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பொது முகாமையாளரும் கலந்துகொண்டனர்.










