போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரூ.475 இலட்சத்துக்கும் அதிகமான பெறுமதியுடைய பல சொத்துக்கள் மற்றும் வாகனங்களை முடக்குவதற்கு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
பதவிய பராக்கிரமபுர பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சொத்துக்களை ஈட்டியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கிடைத்த முறைப்பாடு, பொலிஸ் மா அதிபரால் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த நபர் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்கள் மற்றும் வாகனங்களை கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
அவற்றில், அவரது மனைவியின் பெயரில் புதிய நகர், பதவிய பகுதியில் கொள்வனவு செய்யப்பட்ட சுமார் ரூ.275 இலட்சம் பெறுமதியான 15 பேர்ச்சஸ் காணியும், அதில் கட்டப்பட்டுள்ள இருமாடிக் கட்டிடமும் அடங்குகின்றன.
மேலும், அனுராதபுரம் விஜயபுர பகுதியில் அமைந்துள்ள சுமார் ரூ.120 இலட்சம் பெறுமதியான 15 பேர்ச்சஸ் காணியும் அதில் கட்டப்பட்டுள்ள வீடும், சுமார் ரூ.65 இலட்சம் பெறுமதியான வேன் ஒன்றும், சுமார் ரூ.15 இலட்சம் பெறுமதியான சிறிய லொறி ஒன்றும் விசாரணைகளின்போது அடையாளம் காணப்பட்டுள்ளன.
பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்ததாக சந்தேகிக்கப்படும் 47 வயதான நபரும் அவரது 45 வயதான மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட சுமார் ரூ.475 இலட்சம் பெறுமதியான சொத்துக்களை 2026 செப்டெம்பர் 22ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு முடக்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.








