சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் தேசிய சமுத்திர வளங்கள் பாதுகாப்பு வாரம் – 2026ஐ முன்னிட்டு, அக்கரைப்பற்று சின்ன முகத்துவாரம் கடற்கரையோரப் பகுதியில் இன்று (22) விசேட கடற்கரை தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடற்கரைச் சூழலைப் பாதுகாத்தல், கடற்கரை மாசுபாட்டைக் குறைத்தல், கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாத்தல் மற்றும் பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டது.
கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் (MEPA) அம்பாறை மாவட்ட கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரி கே. சிவகுமார் மற்றும் உதவி கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரி எச்.கே.எம். ஜெம்ஸீத் ஹஸன் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் 241ஆவது இராணுவப் படைப்பிரிவைச் சேர்ந்த Lt. Col. RMVB Samaranayaka தலைமையிலான இராணுவத்தினரும், ஒலுவில் கடற்படைப் பிரிவைச் சேர்ந்த Lt. NDT Abeywickrama தலைமையிலான கடற்படையினரும் கலந்துகொண்டனர்.
மேலும், சிவில் பாதுகாப்புப் படையினர், ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஆலையடிவேம்பு பிரதேச சபை பணியாளர்கள், சமுர்த்தி பயனாளர் குழுத் தலைவர் மற்றும் பிரஜாஷக்தி உறுப்பினர்களின் தலைவர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு தூய்மைப்படுத்தல் பணிகளில் பங்களிப்பு வழங்கினர்.
தூய்மைப்படுத்தல் நடவடிக்கையின்போது கடற்கரையோரத்தில் நீண்டகாலமாக தேங்கியிருந்த பொலித்தீன், பிளாஸ்டிக், கண்ணாடி, உக்கக்கூடிய மற்றும் உக்காத கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகள் சேகரிக்கப்பட்டன.
சேகரிக்கப்பட்ட கழிவுகள் வகைப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு வகையினதும் நிறை தனித்தனியாக அளவிடப்பட்டு பதிவு செய்யப்பட்டதுடன், உரிய முறையில் அகற்றுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டன.
இதன்போது மொத்தம் 250 கிலோ 154 கிராம் (250.154 கிலோ) கழிவுகள் கடற்கரைப் பகுதியிலிருந்து அகற்றப்பட்டன.
கடற்கரையோரத்தில் காணப்பட்ட கழிவுகளில் ஒரு பகுதி பொதுமக்களின் கவனக்குறைவான கழிவு அகற்றல் நடவடிக்கைகளாலும், கடல் மற்றும் அலைகள் மூலம் கரையொதுங்கிய கழிவுகளாலும் ஏற்பட்டிருக்கக்கூடும் என அவதானிக்கப்பட்டது.
கடற்கரை மற்றும் கடல் சூழலில் காணப்படும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் கடல்வாழ் உயிரினங்களுக்கும் கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்பிற்கும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், கடற்கரையைத் தூய்மையாகப் பேணுவது ஒவ்வொரு பொதுமகனினதும் சமூகப் பொறுப்பு என இந்நிகழ்வின் மூலம் வலியுறுத்தப்பட்டது.
மேலும், கழிவுகளை வகைப்படுத்தி அவற்றின் நிறையை அளவிட்டு பதிவு செய்தமை, குறித்த கடற்கரைப் பகுதியில் நிலவும் மாசுபாட்டின் தன்மை மற்றும் அளவை மதிப்பிடுவதற்கும், எதிர்கால சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
கிழக்கு மாகாணத்தின் கடற்கரைப் பகுதிகளில் கடற்கரை மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும், கடல் வளங்களையும் கடல்சார் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கவும் அரச நிறுவனங்கள், பாதுகாப்புப் படையினர், உள்ளூராட்சி அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் ஒருங்கிணைந்த பங்களிப்புடன் இவ்வாறான செயற்றிட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
(எம்.எஸ்.எம். ஸாகிர்)











