எதிர்வரும் செப்டம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு வருகை தரும் பொதுமக்கள், புத்தகங்களை கொள்வனவு செய்யும்போது மீள்பயன்படுத்தக்கூடிய சூழலுக்கு உகந்த பைகளை கொண்டு வருமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த புத்தகக் கண்காட்சிகளின்போது பார்வையாளர்கள் புத்தகங்களை எடுத்துச் செல்ல அதிகளவில் பிளாஸ்டிக் ‘சிலி சிலி’ பைகளை பயன்படுத்தியமை அவதானிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2025 ஒக்டோபர் 1ஆம் திகதிய 2456/41ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின்படி, கைப்பிடிகளைக் கொண்ட பிளாஸ்டிக் பைகளை நுகர்வோருக்கு இலவசமாக வழங்க முடியாது. அவை விற்பனை செய்யப்பட்டால், அதன் விலை பற்றுச்சீட்டில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனால் ஏற்படும் சுற்றாடல் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில் இலங்கை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
பிளாஸ்டிக் ஷொப்பிங் பைகளுக்கு மேலதிகமாக, ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உறிஞ்சுகுழாய்கள், கிளறிகள், தட்டுகள், குவளைகள், கரண்டிகள், முட்கரண்டிகள், கத்திகள், சாப்ஸ்டிக்ஸ் மற்றும் பொலித்தீனால் தயாரிக்கப்பட்ட உணவுப் பொதியிடும் தாள்கள் ஆகியவற்றை விற்பனை செய்தல், இலவசமாக வழங்குதல், காட்சிப்படுத்துதல் அல்லது பயன்படுத்துதல் ஆகியவையும் சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளன.
புத்தகக் கண்காட்சி வளாகத்திலுள்ள உணவு விற்பனை நிலையங்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக உணவு விற்பனையாளர்களுடன் ஏற்கனவே உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்துடன் இணைந்து, புத்தகக் கண்காட்சிக் காலப்பகுதியில் “அறிவுடன் வாசிப்போம் – அறிவுடன் எடுத்துச் செல்வோம்” என்ற தொனிப்பொருளில் விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றையும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை முன்னெடுக்கவுள்ளது.







