வைத்தியர் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையின் நிர்வாகத்தை இலங்கை விமானப்படையிடம் ஒப்படைத்து, கலப்பு நிர்வாக முறையின் கீழ் முன்னெடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கான தீர்மானம் 2026 பெப்ரவரி 9ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை விமானப்படை இணைந்து முன்வைத்த முன்மொழிவின் அடிப்படையில் இந்த புதிய நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளது.
இதன்படி,
- வைத்தியசாலையின் உரிமையும் சொத்துக்களும் 100 சதவீத திறைசேரிப் பங்குகளைக் கொண்ட நிறுவனமொன்றுக்கு மாற்றப்படும்.
- வைத்தியசாலையின் நிர்வாகப் பொறுப்பு இலங்கை விமானப்படையிடம் ஒப்படைக்கப்படும்.
- பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரையின் அடிப்படையில் திறைசேரிச் செயலாளரால் 11 உறுப்பினர்களைக் கொண்ட பணிப்பாளர் சபை நியமிக்கப்படும்.
- 2026 முதல் 2028ஆம் ஆண்டு வரை ஊழியர்களின் சம்பளம் மற்றும் செயற்பாட்டு செலவுகளுக்கான நிதியை திறைசேரி வழங்கும்.
- 2028ஆம் ஆண்டுக்குப் பின்னர் வைத்தியசாலை சுயநிதி அடிப்படையில் இயங்கும்.
- பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் சுகாதார சேவைகளுக்காக ஆண்டுதோறும் 125 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள், மருத்துவப் பொருட்கள் மற்றும் நுகர்பொருட்கள் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கு ஒதுக்கீடுகள் மூலம் வழங்கப்படும்.
வைத்தியசாலை தொடர்ந்து உள்நோயாளர் மற்றும் வெளிநோயாளர் சிகிச்சைகளை வழங்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இச்சேவைகள் இலவசமாகவும் கட்டணம் அறவிடும் அடிப்படையிலும் வழங்கப்படும்.
முன்னதாக, 2017ஆம் ஆண்டு வைத்தியர் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.







