உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துக்கு சதித்திட்டம் தீட்டியமை, உதவி ஒத்தாசை புரிந்தமை உள்ளிட்ட 23,270க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பிரதிவாதிகளுக்கு எதிராக இடம்பெற்ற வழக்கின் தீர்ப்பு நாளை (22) அறிவிக்கப்படவுள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க, இராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஷங்க ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.
நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், முறைப்பாட்டாளர் தரப்பில் 2,309 சாட்சிகள் சாட்சியமளித்துள்ளனர்.
நீண்டகாலமாக இடம்பெற்ற சாட்சி விசாரணைகளின் பின்னர், முறைப்பாட்டாளர் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சாட்சி விசாரணைகள் கடந்த ஆகஸ்ட் 24ஆம் திகதி நிறைவடைந்தன.
இதனைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பை செப்டெம்பர் 22ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்திருந்தது.








