நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக 171 கடற்படை அனர்த்த நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இந்தக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இன்று (21) தெற்கு மற்றும் மேற்கு கடற்படைக் கட்டளைகளின் கீழ் 14 அனர்த்த நிவாரணக் குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தெற்கு கடற்படைக் கட்டளையின் கீழ் தவலம பகுதியில் 2 குழுக்கள், ஹினிதும பகுதியில் ஒரு குழு, மாபலமக பகுதியில் ஒரு குழு மற்றும் நாகொட பகுதியில் ஒரு குழு என 5 குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
மேற்கு கடற்படைக் கட்டளையின் கீழ் நாவலப்பிட்டி மற்றும் யட்டியாந்தோட்டை பகுதிகளில் தலா 2 குழுக்களும், சீதாவக்க பகுதியில் 2 குழுக்களும், இரத்தினபுரி பகுதியில் 3 குழுக்களும் என மொத்தம் 9 குழுக்கள் தேவை ஏற்படும் பட்சத்தில் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்துவதற்காக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.








