தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இன்றுடன் (21) இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன.
2024 செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க வெற்றிபெற்றதுடன், 09ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
முதல் விருப்ப வாக்கெடுப்பில் எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறாத நிலையில், இரண்டாம் விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டன. அதன் பின்னர் அநுர குமார திசாநாயக்க 5,740,179 வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார்.
அவர் 2024 செப்டெம்பர் 23ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்றதுடன், கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து செப்டெம்பர் 24ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.
பின்னர் 2024 நவம்பர் 14ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 6,863,186 வாக்குகளைப் பெற்று 159 பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றியது.
இதில் தேர்தல் தொகுதிகள் மூலம் 141 ஆசனங்களும் தேசியப் பட்டியல் மூலம் 18 ஆசனங்களும் கிடைத்தன. ஐக்கிய மக்கள் சக்தி 40 ஆசனங்களையும், இலங்கைத் தமிழரசுக் கட்சி 8 ஆசனங்களையும், புதிய ஜனநாயக முன்னணி 5 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 3 ஆசனங்களையும் பெற்றன.
அரசாங்கம் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு, “ஈராண்டு ஆட்சி – நாட்டிற்கு மாட்சி” என்ற தொனிப்பொருளில் நாடு முழுவதும் மக்கள் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறும் இந்தப் பேரணிகள் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள், அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இரண்டு ஆண்டு ஆட்சிக் காலத்தில் அரசாங்கம் பல்வேறு விமர்சனங்களையும் சவால்களையும் எதிர்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.







