நாட்டின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 13 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று (21) பிற்பகல் வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காலி மாவட்டத்தின் நெலுவ, களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட, கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரள ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு சிவப்பு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, தெரணியகல, மாவனல்ல, யட்டியாந்தோட்டை மற்றும் தெஹியோவிட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, கொத்மலை கிழக்கு, கொத்மலை மேற்கு மற்றும் நோர்வூட் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் அடங்குகின்றன.
அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவுக்கும் மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.








