நாட்டிற்கு வடகிழக்காக, அந்தமான் பகுதிக்கு அருகில் வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம், அடுத்த 24 மணித்தியாலங்களில் தாழமுக்கமாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் தாக்கம் காரணமாக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் காற்று மற்றும் மழை நிலைமை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், குறித்த கடற்பரப்புகளில் பயணம் செய்யும் கடற்பயணிகள் மற்றும் மீனவ சமூகத்தினர் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால ஆலோசனைகள் மற்றும் முன்னறிவிப்புகளை தொடர்ந்து அவதானிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
கடற்பரப்பு நிலைமை:
காங்கேசன்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணித்தியாலத்திற்கு 30–40 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக சிலாபம் வரையான கடற்பரப்புகளிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் அவ்வப்போது 50–60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
மேலும், புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0–2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பரப்புகளில் அவ்வப்போது பலத்த காற்று வீசுவதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.








