சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படுவதே அரச நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் அடிப்படைத் தூணாகும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அரச சேவையில் உள்ள அனைத்து அதிகாரிகளும் நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய விடயம், சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சியாளர், அரசியல்வாதி, அரச அதிகாரி மற்றும் சாதாரண பிரஜை என அனைவருக்கும் சட்டம் ஒரே விதமாகவே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகள் திணைக்களத்திற்குப் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட பயிற்சிபெற்ற இரண்டாம் தர சிறைச்சாலையதிகாரிகள் மற்றும் சிறைக் கட்டுப்பாட்டாளர்களின் வெளியேற்ற அணிவகுப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இரு பயிற்சிப் பாடநெறிகளின் கீழ் 265 அதிகாரிகள் தமது பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறியதுடன், குறித்த நிகழ்வு நேற்று (19) நடைபெற்றது.
அதிகாரம் உள்ள நபருக்கு ஒரு சட்டமும், அதிகாரம் இல்லாத நபருக்கு மற்றொரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்படுவது சட்டத்தின் ஆட்சி அல்ல என சுட்டிக்காட்டிய அமைச்சர், அனைவருக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படுவதே உண்மையான சட்டத்தின் ஆட்சி என்றும் தெரிவித்தார்.
அரச ஊழியர்களுக்கு எவ்வித அரசியல் தொடர்புகளோ அல்லது அரசியல் அழுத்தங்களோ அவசியமில்லை என்றும், அவர்கள் நடுநிலையாகக் கடமையாற்றுவதற்கான பொறுப்புணர்வுடன் செயற்படுவதே அவசியம் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.








