எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக சில வரிகளிலிருந்து விலக்களிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அக்குரஸ்ஸையில் இன்று (20) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
சில வரிகளால் மக்கள் சுமையை எதிர்கொள்வதை அரசாங்கம் அறிந்துள்ளதாகவும், எனவே எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக குறிப்பிட்ட சில வரிகளை நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி திறைசேரியை வலுப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மூலதனச் செலவினங்களுக்காக 1,750 பில்லியன் ரூபாயும், நேரடி மூலதனச் செலவினங்களுக்காக 250 பில்லியன் ரூபாயும் என மொத்தம் 2,000 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வீதிகள், பாலங்கள், மின்சாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்காக, இலங்கை வரலாற்றில் அதிகளவு மூலதனச் செலவினம் மேற்கொள்ளப்படும் ஆண்டாக அடுத்த ஆண்டு அமையும் என்றும் அவர் கூறினார்.
அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாகவே திறைசேரியிலுள்ள நிதியை கிராமப்புற மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வறுமையில் உள்ள மக்களைத் தெரிவுசெய்து ‘அஸ்வெசும’ திட்டத்தின் ஊடாகவும், சிறுநீரக நோயாளர்கள் மற்றும் பாடசாலைப் புத்தகங்களை வாங்க முடியாதவர்களுக்கான நிவாரணங்கள் ஊடாகவும் அரசாங்கம் உதவிகளை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம், ‘அஸ்வெசும’ பயனாளி குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கும், 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் மாணவர்களுக்கும் 6,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும், அதற்கான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மக்கள் எப்போதும் நிவாரணங்களைச் சார்ந்திருப்பது சிறந்ததல்ல என்றாலும், பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டாலும் நிவாரணங்களை நம்பி வாழும் நலிவுற்ற சமூகப் பிரிவினர் எப்போதும் இருப்பர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வருமான வழியற்றவர்கள், உழைப்பதற்கான உடல் வலுவற்றவர்கள் மற்றும் எதிர்பாராத அனர்த்தங்களுக்கு உள்ளானவர்களுக்கு உதவுவது ஒரு நாட்டின் பொறுப்பு என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் இல்லங்களில் வசிக்கும் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களை இழந்த சிறுவர்களுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மாதாந்தம் 5,000 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
அவர்கள் 18 வயதில் குறித்த நிலையங்களிலிருந்து வெளியேறினாலும், 21 வயது வரை மாதாந்தம் 5,000 ரூபாய் கொடுப்பனவு தொடர்ந்தும் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அவர்கள் 21 வயதை அடைந்து சமூகத்தில் இணையும் போது, வீடொன்றைக் கட்டி தங்களை நிலைநிறுத்திக்கொள்வதற்காக 10 இலட்சம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.








