காசா முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் சிறுவன் உட்பட குறைந்தது 3 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.காசா நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள ஷுஜையா பகுதியில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
மத்திய காசாவின் நுசைராத் அகதிமுகாமின் வடக்குப் பகுதியில் இஸ்ரேல் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிறுமி ஒருவர் பின்னர் உயிரிழந்ததாக அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இதேவேளை, மத்திய காசாவின் மகாஸி அகதிமுகாமின் கிழக்குப் பகுதியில் இஸ்ரேல் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
வடக்கு காசாவின் ஜபாலியா அகதிமுகாமின் மேற்குப் பகுதியில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்ததாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தத் தாக்குதலில் காசா சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் முனீர் அல்-புர்ஷின் மகனான பசீர் அல்-புர்ஷ் உயிரிழந்ததாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
2025 அக்டோபரில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்துக்குப் பின்னரும், காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 1,381 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 அக்டோபரில் போர் ஆரம்பித்ததிலிருந்து காசாவில் 73,795 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 174,869 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








