இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட மேம்பட்ட ட்ரோன்களை ஒன்றிணைக்கும் புதிய தொழிற்சாலையொன்றை செர்பியா திறந்துள்ளது.
இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் ட்ரோன்கள் செர்பிய இராணுவத்துக்கும், ஏனைய நாடுகளின் ஆயுதப் படைகளுக்கும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செர்பிய ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிச், பெயர் குறிப்பிடப்படாத இஸ்ரேலிய நிறுவனமொன்றுடன் இணைந்து செயற்படும் இந்த தொழிற்சாலையை வியாழக்கிழமை (17) திறந்து வைத்தார்.
“எமது திட்டங்கள் மிகப் பெரியவை” என சமூக ஊடகப் பதிவொன்றில் தெரிவித்த வுசிச், இஸ்ரேலிய பங்காளிகளுடன் இணைந்து செர்பியா முழுவதும் மேலும் குறைந்தது மூன்று தொழிற்சாலைகள் திறக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த தொழிற்சாலையில் சுமார் 100 பேர் பணியாற்றவுள்ளதுடன், செர்பிய ஆயுதப் படைகளுக்கும் ஏனைய நாடுகளின் இராணுவங்களுக்கும் அதிநவீன உபகரணங்கள் தயாரிக்கப்படும் என வுசிச் தெரிவித்துள்ளார்.
எனினும், தொழிற்சாலை அமைந்துள்ள இடம் மற்றும் அதனுடன் இணைந்து செயற்படும் இஸ்ரேலிய நிறுவனத்தின் பெயரை அவர் வெளியிடவில்லை.
உற்பத்தி செயற்பாட்டின் இரகசியத்தன்மை காரணமாக தொழிற்சாலை திறப்பு நிகழ்வில் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, விசாரணை ஊடகமான BIRN மற்றும் இஸ்ரேலிய நாளிதழான Haaretz ஆகியவற்றின் முந்தைய செய்திகளின்படி, இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனமான Elbit Systems, செர்பியாவின் ட்ரோன் உற்பத்தி நடவடிக்கையில் பங்காளியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
காஸா மற்றும் மேற்குக் கரையில் இடம்பெற்ற நடவடிக்கைகளில் Elbit Systems நிறுவனத்தின் பங்கு தொடர்பாக முன்னதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கடந்த மாதம் செர்பிய செய்தி நிறுவனமான Nezavisne Dnevne Novine-க்கு கருத்து தெரிவித்த வுசிச், இந்த தொழிற்சாலையின் நோக்கம் “அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதும், சாத்தியமான அனைத்து ஆக்கிரமிப்பாளர்களையும் தடுக்கும் அளவுக்கு வலிமையாக இருப்பதுமே” எனத் தெரிவித்திருந்தார்.
மேற்கு பால்கன் பிராந்தியத்தில் நேட்டோவில் அங்கம் வகிக்காத சில நாடுகளில் செர்பியாவும் ஒன்றாகும். தனது இராணுவ நடுநிலைமையைப் பாதுகாப்பதற்காக அந்நாடு இராணுவத்தில் அதிகளவில் முதலீடு செய்து வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேலுக்கான செர்பியாவின் ஆயுத ஏற்றுமதி தொடர்பிலும் அந்நாடு கவனத்துக்கு உள்ளாகியுள்ளது.
BIRN மற்றும் Haaretz வெளியிட்ட தகவலின்படி, இஸ்ரேலுக்கான செர்பியாவின் ஆயுத ஏற்றுமதி 2023ஆம் ஆண்டில் 1.4 மில்லியன் யூரோவாக இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் 42.3 மில்லியன் யூரோவாக அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் செர்பியாவுக்கு விஜயம் செய்த ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பனீஸ், காஸா போரின் பின்னணியில் ஆயுத ஏற்றுமதியை கட்டுப்படுத்துமாறு பல நாடுகள் கோரிக்கை விடுத்துள்ள போதிலும், பெல்கிரேட் இஸ்ரேலின் “மிகவும் உறுதியான மற்றும் தீர்மானமான கூட்டாளிகளில்” ஒன்றாக தொடர்வதாகத் தெரிவித்திருந்தார்.
ஆதாரம்: அல்ஜசீரா








