மக்காவை தனது “அடக்குமுறையின் அடையாளமாக” சவுதி அரேபியா பயன்படுத்துவதாக யெமனின் ஹூதி இயக்கத் தலைவர் அப்துல்-மலிக் அல்-ஹூதி குற்றம்சாட்டியுள்ளார்.
சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற உரையில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த அல்-ஹூதி, சவுதி அரேபியா மக்காவை பயன்படுத்துவதாக கூறி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மக்காவை இலக்குவைத்ததாக சவுதி அரேபியா, அன்சார் அல்லாஹ் அமைப்பின் மீது குற்றம்சாட்டி வரும் நிலையில், யெமனில் தனது அரசியல் மற்றும் இராணுவ நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக புனித நகரத்தை சவுதி பயன்படுத்துவதாக அல்-ஹூதி தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவை கண்டிப்பதற்காகவும், யெமனுக்கு ஆதரவளிப்பதற்காகவும் முஸ்லிம் உலக நாடுகள் முன்வர வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
சவுதி அரேபியாவின் “ஆக்கிரமிப்பு” 12ஆவது ஆண்டை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட அல்-ஹூதி, சனாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீது சவுதி இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்ததன் மூலம் தற்போதைய மோதலின் இந்த கட்டம் தொடங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் அன்சார் அல்லாஹ் அமைப்பு தெற்குப் பகுதிகளை நோக்கி முன்னேறி, மொக்கா, தபாப் மற்றும் பாப் அல்-மந்தப் பகுதிகளை கைப்பற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியா யெமனைத் தற்காப்பு நிலைக்குத் தள்ளியுள்ளதாகவும், தற்போது இடம்பெறும் போர்க்கள நடவடிக்கைகள் யெமனை அடக்கி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயலும் நாட்டுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளாகும் என்றும் அல்-ஹூதி கூறியுள்ளார்.
மேலும், சவுதிக்காக அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்த இராணுவ நடவடிக்கையை வழிநடத்துவதாகவும், அரசியல் கொள்கைகளை திணித்து சவுதியை இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்வதும் அவர்களே என்றும் அல்-ஹூதி குற்றம்சாட்டியுள்ளார்.
ஆதாரம்: அல்ஜசீரா








