உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 1 சதவீதம் சரிந்து, தொடர்ந்து மூன்றாவது வர்த்தக அமர்விலும் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
எனினும், மத்திய கிழக்கு பிராந்தியத்திலிருந்து மாற்று வழிகள் மூலம் எண்ணெய் சந்தைகளுக்கு விநியோகிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு காரணமாக, வெள்ளிக்கிழமை எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 அமெரிக்க டொலருக்கு மேல் நீடித்தது.
இதன்படி, பிரென்ட் கச்சா எண்ணெய் எதிர்கால விலை 1.01 டொலர் அல்லது 1 சதவீதம் குறைந்து, ஒரு பீப்பாய் 103.77 டொலராக பதிவாகியுள்ளது.
அதேவேளை, அமெரிக்காவின் West Texas Intermediate (WTI) கச்சா எண்ணெய் விலை 1.03 டொலர் அல்லது 1 சதவீதம் குறைந்து, ஒரு பீப்பாய் 100.88 டொலராக பதிவாகியுள்ளது.
இரு முக்கிய எண்ணெய் விலை அளவுகோள்களும் வியாழக்கிழமை (17) சுமார் 1 சதவீதம் சரிவடைந்திருந்தன.
சவுதி அரேபியாவுக்கும் ஈரான் ஆதரவு பெற்ற யெமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே வியாழக்கிழமை எல்லை தாண்டிய புதிய வான் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் பிராந்திய மோதல் மேலும் விரிவடைந்துள்ளது.
எனினும், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதலால் எண்ணெய் விநியோகத்தில் ஏற்படக்கூடிய புதிய பாதிப்புகள் குறித்த கவலைகளை விட, மாற்று வழிகள் மூலம் எண்ணெய் விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என்ற எதிர்பார்ப்புக்கு வர்த்தகர்கள் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளனர்.








