போதைப்பொருள் பயன்படுத்தி மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிவதற்கான சோதனைகளை தீவிரப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதுதொடர்பில் நாடு முழுவதும் உள்ள அனைத்து போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
தினசரி இடம்பெறும் வீதி விபத்துகள் மற்றும் பாரிய விபத்துகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வுகளின்போது, போதைப்பொருள் பயன்பாடு, மதுபோதையில் வாகனம் செலுத்துதல், ஆபத்தான மற்றும் கவனயீனமான முறையில் வாகனம் செலுத்துதல், அத்துடன் அதிகப்படியான சோர்வு ஆகியவை முக்கிய காரணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, டிப்பர் வாகனங்கள், லொறிகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பயணிகள் பேருந்துகளின் சாரதிகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தி சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்திய பல பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களின் சாரதி உரிமங்களை இடைநிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பேருந்து சாரதிகள் அதிக வேகத்தில், போட்டியிடும் வகையில், ஒழுக்கமற்ற முறையில் அல்லது போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்துவதை பொதுமக்கள் அவதானித்தால், அது தொடர்பான காணொளியை 070 47 55 600 என்ற WhatsApp இலக்கத்திற்கு அனுப்புமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காணொளியில் வாகனத்தின் பதிவு இலக்கம் தெளிவாகத் தெரியுமாறு பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில், எந்தவித பாகுபாடுமின்றி சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.








