வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காதது குறித்து விளக்கமளிப்பதற்காக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளரை எதிர்வரும் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேனவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அரசுத் தரப்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, அரச புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிய பொலிஸ் பரிசோதகர் ரஞ்சன் செனரத் பண்டார விசாரணைக்கு தேவையான நபர் எனவும், அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடிய அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவர் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ளது.








