2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீத நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தேசிய கணக்கு மதிப்பீடுகளின்படி, ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரையிலான காலப்பகுதியில் இந்த வளர்ச்சி பதிவாகியுள்ளது.
2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 5.1 சதவீத பொருளாதார வளர்ச்சி பதிவாகியிருந்த நிலையில், இரண்டாம் காலாண்டில் வளர்ச்சி வேகம் 4.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இரண்டாம் காலாண்டில் கைத்தொழில் துறை 7.3 சதவீத வளர்ச்சியையும், சேவைத் துறை 2.7 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளன.எனினும், விவசாயத் துறையில் 2.3 சதவீத பின்னடைவு பதிவாகியுள்ளது.
கைத்தொழில் துறையின் வளர்ச்சிக்கு சுரங்கம் மற்றும் அகழ்வாராய்ச்சி, கட்டுமானம், மின்சாரம் மற்றும் எரிசக்தி விநியோகம் ஆகிய துறைகளின் வளர்ச்சி முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேவைத் துறையில் தகவல் தொழில்நுட்ப சேவைகள் 10 சதவீதமும், காப்புறுதி சேவைகள் 8 சதவீதமும், நிதிச் சேவைகள் 7.7 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளன.
இதனிடையே, நன்னீர் மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் நெல் சாகுபடி குறைவடைந்தமை விவசாயத் துறையின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் தற்போதைய சந்தை விலைகளின் அடிப்படையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8,254,176 மில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது. இது 11.3 சதவீத வளர்ச்சியாகும்.
மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் காணப்படும் நிச்சயமற்ற தன்மை காரணமாக சுற்றுலாத் துறையில் ஓரளவு மந்தநிலை ஏற்பட்டிருந்தாலும், இறக்குமதி அளவு அதிகரித்ததன் மூலம் உள்நாட்டு உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தமை மற்றும் கட்டுமானத் துறையின் விரிவாக்கம் ஆகியவை பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.





