உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று (14) இரண்டு சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் குழாய் ஒன்று மூடப்பட்டமை, சவூதி அரேபியா மீதான புதிய ஹூதி தாக்குதல்கள் மற்றும் மத்திய கிழக்கில் கப்பல்கள் மீது ஈரான் மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் காரணமாக எண்ணெய் விலையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, ப்ரெண்ட் ரக கச்சா எண்ணெயின் விலை 3.03% அதிகரித்து, ஒரு பீப்பாய் 107.51 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அதேவேளை, WTI ரக கச்சா எண்ணெயின் விலை 2.72% அதிகரித்து, ஒரு பீப்பாய் 102.08 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளரான சவூதி அரேபியாவின் கிழக்கு–மேற்கு எண்ணெய் குழாய், ஈராக்கில் இருந்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.
ஹோர்முஸ் நீரிணையைத் தவிர்த்து சவூதி அரேபியாவுக்கு எண்ணெய் ஏற்றுமதியை மாற்று வழியாக மேற்கொள்ள உதவும் இந்த முக்கிய குழாய் மூடப்பட்டுள்ளமை, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 4 சதவீதம் வரை பாதிப்பு ஏற்படும் அபாயத்தை உருவாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ள நிலையில், இன்று சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.








