




சவூதி அரேபியாவில் கடந்த ஆகஸ்ட் 3ஆம் திகதி ஆரம்பமான பட்டத்து இளவரசரின் ஒட்டகத் திருவிழா, கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக நடைபெற்று இன்றுடன் நிறைவடைந்தது.
உலகளாவிய ரீதியில் முதல் முறையாக 20,000க்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நிலையில், அதிக எண்ணிக்கையிலான ஒட்டகங்கள் பங்கேற்றமைக்காக கடந்த ஆண்டு இந்நிகழ்வுக்கு உலக சாதனை விருதும் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இவ்வாண்டு நடைபெற்ற ஒட்டகத் திருவிழாவை பார்வையிடுவதற்காக சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாத் சென்றிருந்தார்.
இதன்போது, போட்டி நிகழ்ச்சி தொடர்பில் கருத்துக்களை தெரிவித்ததுடன், ஏற்பாட்டாளர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் தனது வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, இந்நிகழ்வில் இலங்கையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரும் காணொளி வடிவமைப்பாளருமான முஹம்மது ஸைத் கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றார்.
அவரது பணியைப் பாராட்டிய சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாத், முஹம்மது ஸைத்துக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
படங்கள் மற்றும் செய்தி: முஹம்மத் ஸைத்
ஊடகவியலாளர் – சவூதி அரேபியா








