

ஏ.எஸ்.எம்.ஜாவித்
2026.09.13
மீலாதுன் நபி தினத்தினையொட்டி இனங்களுக்கு மத்தியில் சகவாழ்வு மற்றும் ஒற்றுமையினை ஏற்படுத்தும் நோக்கில் இஸ்லாம் விளையாட்டுத்துறையின் மூலமும் சமூக ஒற்றுமையை வழியுறுத்துவதையும் அடிப்படையாக வைத்து கொலன்னாவ நகர சபையினால் எல்லே சுற்றுப்போட்டி நேற்று சனிக்கிழமை (12.09.2026) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கொலன்னாவ நகர சபை உறுப்பினர் ஏ.என்.எம். பிர்தௌஸ் மௌலவியின் ஒருங்கிணைப்பில் 2ஆவது தடவையாக இடம்பெற்ற போட்டியில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள கொழும்பு மாநகர சபை, கொலன்னாவ நகர சபை, களனி பிரதேச சபை, கொட்டிகாவத்தை பிரதேச சபை ஆகிய நான்கு சபைகளின் அணிகள் போட்டியிட்டன.
இறுதிப் போட்டியில் கொட்டிகாவத்தை மற்றும் கொலன்னாவ அணிகள் மோதின இதில் கொலன்னாவ அணியினர் முதலிடத்தைப் பெற்று வெற்றிக் கேடயத்தை சுவீகரித்துக் கொண்டனர். போட்டியில் பங்குபற்றிய அணிகளுக்கும் சிறந்த வீரர்களுக்கும் பரிசில்கள், வெற்றிக் கேடயங்களுடன் பணப்பரிசில்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வில் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் மற்றும் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும், சமயத் தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றிக்கேடயங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர கொலன்னாவ பள்ளிவாசல் தலைவர் ஹனீப் ஹாஜியார், செயலாளர் பெரோஸ் ஹாஜியார், சமுக சேவையாளர் அஸ்மீர் ஹாஜியார், போட்டியில் கலந்து கொண்ட நகர சபை மற்றும் பிரதேச சபைகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்








