யால தேசிய வனத்தின் 1 மற்றும் 2 ஆம் வலயங்கள் இன்று (14) முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக வனஜீவராசிகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை குறித்த இரு வலயங்களும் சுற்றுலாப் பயணிகளுக்காக மூடப்பட்டிருக்கும்.
யால தேசிய வனத்தில் நிலவும் கடுமையான வறட்சியான காலநிலையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வெப்பமான வானிலை காரணமாக பூங்காவில் உள்ள பல நீர்நிலைகள் வற்றியுள்ளதுடன், விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
மேலும், மரங்கள், செடிகொடிகள் மற்றும் புல்வெளிகள் காய்ந்துள்ளதால், விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விலங்குகளின் நீர்த்தேவையை பூர்த்தி செய்வதற்காக, மாணிக்க கங்கையின் நான்கு இடங்களில் சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் மோட்டார்கள் பயன்படுத்தி நீரைப் பெற்று, நிலத்தடி குழாய்கள் ஊடாக பூங்காவில் உள்ள குளங்களுக்கு நீரை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், தினமும் சுமார் 2 இலட்சம் லீற்றர் நீர் கொண்டு செல்லப்பட்டு, பூங்காவில் உள்ள செயற்கை மற்றும் இயற்கை குளங்களை நிரப்பும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.
யால தேசிய வனம் 44 பாலூட்டி இனங்கள், 215 பறவை இனங்கள், 47 ஊர்வன இனங்கள் மற்றும் 21 மீன் இனங்களின் வாழிடமாக திகழ்கிறது.
வறட்சியான சூழ்நிலையில் விலங்குகள் உணவு மற்றும் நீரைத் தேடி செல்லும்போது ஏற்படும் இடையூறுகளைக் குறைக்கும் நோக்கில், யால தேசிய வனத்தின் 1 மற்றும் 2 ஆம் வலயங்களை ஒரு மாத காலத்திற்கு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.








