ரஷ்யாவின் டீசல் உள்ளிட்ட எரிபொருள் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வேண்டாம் என உக்ரைன் ஜனாதிபதி வொளேடிமிர் ஸெலென்ஸ்கியிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்திய கிழக்கில் இடம்பெறும் போர் காரணமல்ல எனவும், உக்ரைன் – ரஷ்யா போரே இதற்கு முக்கிய காரணம் எனவும் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் முக்கிய பொருளாதார உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து ரஷ்யா தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டுவரும் நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை உக்ரைன் உத்தியோகபூர்வ இராணுவ இலக்குகளாகக் குறிப்பிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைன் மேற்கொண்டுவரும் நீண்ட தூர ட்ரோன் தாக்குதல்களால் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் எரிபொருள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக ரஷ்யாவின் பல பகுதிகளில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்கம் அமெரிக்காவிலும் உணரப்பட்டுள்ளதாகவும், டீசல் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்துள்ள ட்ரம்ப், ரஷ்யா மீது தாக்குதல் நடத்துவதற்கு வேறு இலக்குகளைத் தேர்ந்தெடுக்குமாறு அவரிடம் கோரியதாக குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, ரஷ்யாவின் எரிபொருள் உற்பத்தி மற்றும் விநியோக கட்டமைப்புகளை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்த வேண்டாம் என தாம் கேட்டுக்கொண்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.








