இலங்கையின் புதிய கல்வி மறுசீரமைப்புகளின் கீழ், பாடசாலை மாணவர்கள் சுமக்கும் பைகளின் எடை கணிசமாகக் குறைக்கப்படவுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் பாடசாலைப் பைகளின் எடையைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் அறிமுகப்படுத்தப்படவுள்ள செயற்பாட்டு அடிப்படையிலான கற்றல் முறையினால், மாணவர்கள் வீடு மற்றும் பாடசாலைக்கு இடையில் எடுத்துச் செல்ல வேண்டிய புத்தகங்களின் எண்ணிக்கை குறையும் என அவர் குறிப்பிட்டார்.
வகுப்பறைச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் புத்தகங்கள் பாடசாலையிலேயே வைக்கப்படும். இதனால் மாணவர்கள் அவற்றை தினமும் வீடு மற்றும் பாடசாலைக்கு இடையில் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
கற்றல் பணிகளை நிறைவு செய்த பின்னர், தவணை முடிவில் மட்டுமே மாணவர்கள் அந்தப் புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியும் என பிரதமர் தெரிவித்தார்.
மேலும், 2027ஆம் ஆண்டு முதல் தரம் 6 மாணவர்களுக்கு தொகுதி அடிப்படையிலான (Module-based) கற்றல் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதன் கீழ், பெரிய அளவிலான பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக, ஒவ்வொரு பாடத்திற்கும் குறிப்பிட்ட தவணைக்குத் தேவையான கற்றல் தொகுதிகள் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.
இந்த மாற்றங்களின் மூலம் மாணவர்கள் தினமும் சுமந்து செல்லும் பாடசாலைப் பைகளின் எடை கணிசமாகக் குறையும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.








