ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் கொழும்பு பேராயர் பேரருட்திரு மல்கம் கர்தினால் ரஞ்சித் தலைமையிலான கத்தோலிக்க மதத் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று (10) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் இடையிலான சகவாழ்வு, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கும், இனவாத அல்லது மத அடிப்படையிலான வெறுப்புச் செயற்பாடுகளைத் தடுப்பதன் மூலம் தேசிய ஒற்றுமையை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் இடம்பெறும் சுற்றுச்சூழல் சேதம் மற்றும் அழிவுகளைத் தடுப்பதற்காக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
அனைத்து சமூகங்களுக்கும் இடையிலான நம்பிக்கையைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை கத்தோலிக்க மதத் தலைவர்கள் பாராட்டியதுடன், அந்த முயற்சிகளுக்கு தமது முழுமையான ஆதரவையும் தெரிவித்தனர்.
கத்தோலிக்க மக்கள் வசிக்கும் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட கத்தோலிக்க சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அருட்தந்தை சிறில் காமினி, அருட்தந்தை ஜூலியன் பெட்ரிக் உள்ளிட்ட மதகுருமார்கள், மத மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முலாஃபர், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகே உள்ளிட்ட பலரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.








