இலங்கையின் நகர்ப்புற போக்குவரத்து நவீனமயமாக்கல் திட்டத்தின் மற்றுமொரு கட்டமாக, மூன்றாவது மெட்ரோ பஸ் டிப்போ ஜா-எல, ஏகல பகுதியில் நேற்று (09) திறந்து வைக்கப்பட்டது.
பொதுப் போக்குவரத்து சேவையின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் மெட்ரோ பஸ் சேவைக்கு ஆதரவளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த டிப்போ, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
போக்குவரத்து அமைச்சின் தகவலின்படி, ஏகல டிப்போவில் செயற்பாடுகள் மற்றும் நிர்வாக சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், 20 புதிய மெட்ரோ பஸ்கள் சேவையில் இணைக்கப்படவுள்ளன.
கம்பஹா மாவட்டத்தின் ஏகல முதல் கொழும்பு மாவட்டத்தின் தலவத்துகொட வரையிலான மெட்ரோ பஸ் பாதை 29.9 கிலோமீற்றர் நீளமானதுடன், அதில் 21 நிறுத்தங்கள் உள்ளடங்குகின்றன.
தலவத்துகொட, பத்தரமுல்ல சந்தி, செத்சிறிபாய, ராஜகிரிய, பொரளை, தெமட்டகொட, பேலியகொட, வத்தளை, ஜா-எல, இலங்கை போக்குவரத்துச் சபை சந்தி மற்றும் ஏகல உள்ளிட்ட முக்கிய இடங்களில் பயணிகள் பஸ்களில் ஏறி பயணிக்க முடியும்.
ஆரம்பத்தில் இரண்டு பாதைகளில் முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட மெட்ரோ பஸ் சேவை தற்போது மேலும் ஐந்து பாதைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, செப்டம்பர் மாதம் முதல் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் Lanka Metro Transit (Pvt) Ltd ஆகியவை இணைந்து ஏழு பாதைகளிலும் மெட்ரோ பஸ் சேவையை முன்னெடுக்கவுள்ளன.








