நுகர்வோரைத் தவறாக வழிநடத்தும் வகையில் காலாவதியான பேக்கரி தயாரிப்புகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட பேக்கரி நிறுவனத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் ரூ.200,000 அபராதம் விதித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகளால் தொடரப்பட்ட இந்த வழக்கில், குறித்த வர்த்தக நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின்போது, 2026/04/16 என காலாவதித் திகதி குறிப்பிடப்பட்டிருந்த ஸ்ட்ராபெரி சுவையூட்டப்பட்ட கிரீம் பன்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த வழக்கு நேற்று (09) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றஞ்சாட்டப்பட்ட நிறுவனம் தம்மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளது.
இதையடுத்து, நிறுவனத்திற்கு ரூ.200,000 அபராதம் விதித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது அவற்றின் உற்பத்தித் திகதி மற்றும் காலாவதித் திகதிகளை முறையாகச் சரிபார்ப்பது நுகர்வோரின் பொறுப்பு என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும், காலாவதியான உணவுப் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் தொடர்பான தகவல்கள் இருப்பின், அலுவலக நேரங்களில் 1977 என்ற துரித இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவிக்குமாறும் அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.









