இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் முன் மற்றும் பின்புற இருக்கைகளில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிவது எதிர்வரும் செப்டெம்பர் 19ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (08) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டு வீதி விபத்துக்களில் 2,700 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற விபத்துக்கள் தொடர்பான ஆய்வுகளில், உயிரிழப்புகள் மற்றும் காயங்களுக்கு பெரும்பாலும் பின்புற இருக்கைகளில் பயணித்தவர்களே, குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்களே உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சாரதிகள் மற்றும் முன்புற இருக்கைகளில் பயணிப்பவர்களுக்கு மாத்திரமன்றி, பின்புற இருக்கைகளில் பயணிப்பவர்களுக்கும் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த விதிமுறை கடந்த ஒரு வருடமாக நடைமுறையில் இருந்து வருவதாகவும், பின்புற சீட் பெல்ட்கள் இல்லாத பழைய வாகனங்களுக்கு அவற்றை பொருத்துவதற்காக சலுகைக் காலம் வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், எதிர்வரும் செப்டெம்பர் 19ஆம் திகதி முதல் அலுவலகப் போக்குவரத்து வாகனங்கள், பாடசாலை வேன்கள் மற்றும் வாடகை வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இந்த விதிமுறையை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விதிமுறைகளைப் பின்பற்றாத வாகனங்களுக்கு எதிராக பொலிஸாரினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்தத் தீர்மானத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும் என ஏற்றுக்கொண்ட அமைச்சர், புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்துவதற்கு போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக வலியுறுத்தியுள்ளார்.
“செப்டெம்பர் 19ஆம் திகதிக்குப் பின்னர், தேவையான சீட் பெல்ட்கள் இல்லாத எந்தவொரு வாகனமும் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்க அனுமதிக்கப்படாது” என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த விதிமுறை இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு மாத்திரமே பொருந்தும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.









