நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை மற்றும் அதிக வெப்பநிலைக்கு மத்தியிலும், இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் விநியோகம் வழமைபோன்று இடம்பெற்று வருவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
எனினும், நீர்மட்டம் குறைவடைந்துள்ள சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் தற்போது காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நான்கு மணித்தியாலங்களுக்கு குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எஞ்சிய 20 மணித்தியாலங்களிலும் நீர் விநியோகம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொனராகலை மாவட்டத்தின் பிபிலை மற்றும் மெதகம பகுதிகளிலும், மஹியங்கனை பிரதேசத்தின் சில பகுதிகளிலும் குறைந்த நீர் அழுத்தம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம், மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுடன் இணைந்து பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
மேலும், மொனராகலை மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்ட கிணறுகள் புனரமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.
குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான அளவு நீர் நீர்த்தேக்கங்களில் போதுமானதாக இருப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறட்சியான காலநிலை தொடரும் நிலையில், பொதுமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துவதுடன், நீர் வீணாவதைத் தவிர்க்குமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கேட்டுக்கொண்டுள்ளது.
செப்டெம்பர் மாத இறுதிப் பகுதியில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் எனவும், வடகிழக்கு பருவமழை ஆரம்பித்தவுடன் நிலைமை மேலும் மேம்படும் எனவும் முன்னறிவிப்புகள் தெரிவிப்பதாக சபை குறிப்பிட்டுள்ளது.









