இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (08) இலங்கையை வந்தடைந்துள்ளார்.
மதியம் 1.25 மணியளவில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விசேட விமானமொன்றில் அவர் நாட்டை வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ராஜ்நாத் சிங் இன்று முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை இலங்கையில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாகும்.
இந்த விஜயத்தின் போது இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்த உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களைச் சந்திக்கவுள்ளார்.
கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின்போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை அமுல்படுத்துவது தொடர்பிலும் இந்த விஜயத்தின்போது மதிப்பாய்வு செய்யப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் 38 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.









