ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கான விமான கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பில் ரூ.100 மில்லியன் இலஞ்சமாக பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
CIABOC தெரிவித்துள்ளதன்படி, இன்று (04) பிற்பகல் சுமார் 2.09 மணியளவில் அதன் விசாரணை அதிகாரிகளால் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார்.
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கான விமானங்களை கொள்வனவு செய்வதுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இலஞ்சப் பணம் தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
CIABOC-ன் கூற்றுப்படி, BIZ Solutions INC என்ற பெயரில் சிங்கப்பூரில் உள்ள Standard Chartered வங்கிக் கணக்கிற்கு 1,454,651.24 யூரோ இலஞ்சப் பணமாக பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் 800,000 அமெரிக்க டொலர்கள், இலங்கை வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான Sabre Vision Holdings LTD என்ற நிறுவனத்தின் பெயரில் சிங்கப்பூரில் உள்ள OCBC வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக CIABOC தெரிவித்துள்ளது.
இந்தப் பணப் பரிமாற்றங்களுக்கு இணையாக, 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் பல சந்தர்ப்பங்களில் இலங்கை வர்த்தகர் ஒருவரிடமிருந்து நாமல் ராஜபக்ஷ மொத்தமாக ரூ.100 மில்லியனை பெற்றதாக CIABOC குற்றஞ்சாட்டியுள்ளது.
இலங்கை வர்த்தகர் ஒருவரிடம் பெறப்பட்ட வாக்குமூலம், பிரான்ஸை தளமாகக் கொண்ட Airbus நிறுவன அதிகாரிகள் CIABOC-க்கு வழங்கிய வாக்குமூலங்கள், அத்துடன் விசாரணையின்போது சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஏனைய தகவல்களின் அடிப்படையில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.








