200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு பயணித்துள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறை உறவுகளின் வளர்ச்சிக்கு இது ஊக்கமளிக்கும் முன்னேற்றமாகும் என ஜப்பானிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
‘லிட்டில் ஜப்பான் குழுமம்’ ஏற்பாடு செய்த இந்தச் சுற்றுலாப் பயணிகள் குழு, நரிடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL455 விமானத்தில் இலங்கைக்கு புறப்பட்டது.
ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் பிவித்துரு ஜனக் குமாரசிங்க மற்றும் வர்த்தகப் பிரிவின் முதலாம் செயலாளர் சந்துன் சமீர ஆகியோர் விமான நிலையத்தில் சுற்றுலாப் பயணிகளை சந்தித்து வழியனுப்பி வைத்தனர்.
இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், இந்தக் குழுவினர் சிகிரியா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு பயணம் செய்வதுடன், பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சைகள் மற்றும் ஆரோக்கிய சேவைகளையும் அனுபவிக்க உள்ளனர்.
‘லிட்டில் ஜப்பான் குழுமம்’ ஏற்பாடு செய்த இந்தப் பயணத்திற்கு இலங்கைத் தூதரகம் தேவையான ஆதரவு, வழிகாட்டுதல் மற்றும் ஒருங்கிணைப்பு வசதிகளை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே விமானத்தில் 200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு பயணிப்பது, ஒரே நேரத்தில் நாட்டிற்கு வருகை தரும் மிகப்பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட ஜப்பானிய சுற்றுலாக் குழுக்களில் ஒன்றாகும் என தூதுவர் குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளிடையே அதிகரித்து வரும் ஆர்வத்துடன், இலங்கையின் சுற்றுலாத்துறை மற்றும் ஏனைய பங்குதாரர்களின் முயற்சிகளும் இணைந்தால், இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாப் பரிமாற்றங்களை மேலும் வலுப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது, இலங்கை தனது முந்தைய சுற்றுலாப் பயணிகள் வருகைப் பதிவுகளை எட்டவும், அதனைத் தாண்டவும் பங்களிக்கும் எனவும் தூதுவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.









