இலங்கையைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளரான ருவந்தி கஜதீரா, பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான நட்புறவுக்கான விக்டோரியா லீக்கின் 125ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற தோட்ட விருந்தில், மன்னர் சார்லஸ் IIIக்கு தனது கையால் உருவாக்கிய சயனோடைப் கலைப்படைப்பொன்றை வழங்கியுள்ளார்.
“එක මවකගෙ දරුවෝ” (Eka Mawakage Daruwo – ஒரே தாயின் பிள்ளைகள்) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கலைப்படைப்பு, மேற்கு லண்டனில் உள்ள லீக்கின் பேஸ்வாட்டர் இல்லத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இலங்கையின் தேசிய கீதத்தால் ஈர்க்கப்பட்ட இந்தப் படைப்பு, இன மற்றும் மத வேறுபாடுகளைக் கடந்து அனைவருக்கும் பொதுவான ஒற்றுமை மற்றும் சொந்த உணர்வை பிரதிபலிக்கிறது.இந்தக் கருத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், பொதுநலவாய அமைப்பின் 56 உறுப்பு நாடுகளின் தேசிய மலர்களையும் ருவந்தி கஜதீரா தனது படைப்பில் இணைத்துள்ளார். அவை, அழிவின் விளிம்பில் உள்ள High Brown Fritillary வகை வண்ணத்துப்பூச்சியைத் தாங்கிய கிரீட வடிவத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மலரும் கையால் வரையப்பட்டதுடன், காகிதம் கையால் தயாரிக்கப்பட்டு, சூரிய ஒளியை மட்டுமே பயன்படுத்தி படைப்பின் அச்சுப்பதிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சயனோடைப் முறையில் காணப்படும் தனித்துவமான நீல நிறம், சாயம் அல்லது நிறமியைப் பயன்படுத்துவதன் மூலம் உருவாக்கப்படுவதில்லை. மாறாக, ஒளி-வேதியியல் எதிர்வினையின் மூலம் உருவாகிறது. இதனால் நச்சுக் கழிவுகள் உருவாகாததுடன், ருவந்தியின் நிலைத்தன்மை சார்ந்த ஆடை வடிவமைப்பு நடைமுறைக்கும் இது ஒத்துப்போகிறது.
இந்த நிகழ்வில் விக்டோரியா லீக்கின் அறங்காவலர்கள், பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகள், பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் சேனாதீரா உள்ளிட்ட உயர்ஸ்தானிகர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
விக்டோரியா லீக்கின் புரவலரான மன்னர் சார்லஸ் III, நிகழ்வில் நினைவுப் பலகையொன்றையும் திறந்து வைத்ததுடன், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
நிகழ்வில் உரையாற்றிய லீக்கின் தலைவர் ஜோன் ஸ்டீல் KC, பொதுநலவாய அமைப்பில் மன்னர் சார்லஸ் IIIன் தலைமைத்துவம் “மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது” எனத் தெரிவித்தார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் அன்டிகுவா மற்றும் பார்புடாவிற்கு மன்னர் சார்லஸ் III மேற்கொள்ளவுள்ள விஜயத்திற்கும், அங்கு நடைபெறவுள்ள பொதுநலவாய அரசாங்கத் தலைவர்கள் மாநாட்டிற்கும் முன்னதாக இந்தக் கலைப்படைப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ருவந்தி கஜதீரா குறித்து
ருவந்தி கஜதீரா, ரோயல் கலைக் கல்லூரியில் (RCA) பேஷன் துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற பின்னர், அந்தக் கல்லூரியின் InnovationRCA முயற்சி முடுக்கி மூலம் லண்டனில் தனது கலை மற்றும் வடிவமைப்பு பணிகளை முன்னெடுத்து வருகிறார்.
அத்துடன், ஐரோப்பிய பல்கலைக்கழகக் கூட்டமைப்பான Circle U. மூலம் பெர்லினில் உள்ள Humboldt-Universität zu Berlin பல்கலைக்கழகத்திலும் கலை-அறிவியல் ஆய்வு உருவாக்கப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
நிலைத்தன்மை சார்ந்த வடிவமைப்பில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள ருவந்தி, 2021ஆம் ஆண்டு Taiwan Fashion Design Award விருதை வென்ற முதல் தெற்காசியர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும், உலகின் மிகப்பெரிய நிலைத்தன்மை சார்ந்த ஆடைப் போட்டியாகக் கருதப்படும் Redress Design Award 2023 போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார்.
இலங்கையின் பாரம்பரிய கைத்தறி நெசவு, இயற்கைச் சாயமிடல் மற்றும் சயனோடைப் போன்ற முறைகளை இணைத்து, இடம், வரலாறு மற்றும் பொறுப்பு ஆகியவற்றை பொருட்களின் உருவாக்க செயல்முறைகள் ஊடாக வெளிப்படுத்துவதே அவரது கலை மற்றும் வடிவமைப்பு பணியின் முக்கிய அம்சமாகும்.








