நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து, 9 நாட்களாக நீர்மின் நிலைய சுரங்கத்திற்குள் சிக்கியிருந்த இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
Upper Trishuli 3A நீர்மின் திட்டத்தின் சுரங்கத்திற்குள் சுமார் 170 மீற்றர் ஆழத்தில் சிக்கியிருந்த 30 வயதான Sanjay Shah மற்றும் இயந்திர மேற்பார்வையாளரான Kabir Maharjan ஆகியோரே மீட்கப்பட்டுள்ளனர்.
Sanjay Shah முதலில் மீட்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக மீட்கப்பட்ட Kabir Maharjan தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நேபாள பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சுரங்கத்தின் உள்ளே இருவரும் காற்று இருந்த ஒரு பாதுகாப்பான பகுதியில் தஞ்சமடைந்திருந்ததாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளநீர், பாறைகள், சேறு மற்றும் குப்பைகள் சுரங்கத்தின் நுழைவுப் பகுதிகளை அடைத்திருந்த போதிலும், அவர்கள் இருந்த பகுதி நேரடியாக வெள்ளத்தால் பாதிக்கப்படாமல் இருந்துள்ளது.
மீட்புப் பணிக்கு தொலைதூரத்திலிருந்து ஆதரவளித்துவரும் அவுஸ்திரேலிய சுரங்க மீட்பு நிபுணர் Arnold Dix, சுரங்கத்திற்குள் இருந்து “ஆம்” அல்லது “சரி” என பொருள்படும் “hunchha” என்ற மெல்லிய பதில் கேட்கப்பட்டதாக AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
மின்சாரம் செயலிழந்த நிலையில், இருளிலும் ஈரப்பதமான சூழலிலும் கிடைத்த தண்ணீர் மற்றும் உணவை சிக்கனமாகப் பயன்படுத்தி இருவரும் உயிர் பிழைத்திருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளமை, இதே சுரங்கத்திற்குள் மேலும் 35 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பனிப்பாறை சரிவால் குறைந்தது 1,280 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5,500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்மின் திட்டங்களும் வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்துள்ளன. குறைந்தது 12 நீர்மின் திட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மீட்புப் பணியாளர்கள் கடந்த ஒன்பது நாட்களாக அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு, சுரங்கங்களில் தேங்கியுள்ள மண், பாறைகள் மற்றும் குப்பைகளை அகற்றி வருகின்றனர். அதேவேளை, சுரங்கங்களுக்குள் சுத்தமான காற்றை செலுத்துவதற்காக குழாய்களும் பொருத்தப்பட்டுள்ளன
.
இந்திய, சீன மற்றும் தென்கொரிய நிபுணர்களின் உதவியுடன் நேபாள மீட்புக் குழுவினர் தொடர்ந்து சுரங்கங்களில் சிக்கியுள்ளவர்களைத் தேடி வருகின்றனர். பல இடங்களில் கடினமாக உறைந்த குப்பைகள் மற்றும் மண் தடையாக இருப்பதால் மீட்புப் பணி சவாலாக நீடித்து வருகிறது.









