ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) இன்று (4) கைது செய்துள்ளது.
வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று முற்பகல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்ஷவிடம் சில மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்காக 06 A330 ரக எயார்பஸ் விமானங்களையும் 08 A350 ரக விமானங்களையும் கொள்வனவு செய்யும் நடவடிக்கையின்போது 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாக அப்போதைய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த விவகாரம் தொடர்பில் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் CIABOC ஆரம்பித்த விசாரணைகளுக்கு அமைய, கபில சந்திரசேன கடந்த மார்ச் 12ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த மே 8ஆம் திகதி கபில சந்திரசேன மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணம் தற்கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.
இதனிடையே, எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் இரண்டாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள ஷமீந்திர ராஜபக்ஷ ஆகியோரைக் கைது செய்வதற்காக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில், பிரான்ஸை தளமாகக் கொண்ட எயார்பஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் இலங்கைக்கு வருகை தந்து CIABOC முன்னிலையில் வாக்குமூலம் வழங்கியிருந்தது.
இவ்வாறான பின்னணியில், எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக நாமல் ராஜபக்ஷ இன்று முற்பகல் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.









