உலகின் 21 நாடுகளில் 12 முதல் 17 வயதுக்குட்பட்ட சுமார் 2 கோடி குழந்தைகள், ஒரே ஆண்டில் தொழில்நுட்பம் ஊடாக மேற்கொள்ளப்படும் பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகத்தின் ஒரே மாதிரியான வடிவத்தை எதிர்கொண்டுள்ளதாக UNICEF வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“Through Children’s Eyes: How Digital Technologies Enable Child Sexual Abuse” எனும் அறிக்கை, குழந்தைகளின் நேரடி அனுபவங்கள் மற்றும் கிடைக்கக்கூடிய மிகப்பெரிய அளவிலான ஆய்வுத் தரவுகளை இணைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, 1.5 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் விரும்பத்தகாத பாலியல் உள்ளடக்கங்களை எதிர்கொண்டுள்ளனர். சுமார் 90 இலட்சம் குழந்தைகள் தங்களது விருப்பத்திற்கு மாறாக பாலியல் உரையாடல்களில் ஈடுபடுமாறும், பாலியல் படங்களைப் பகிருமாறும் வற்புறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், சுமார் 40 இலட்சம் குழந்தைகளின் பாலியல் படங்கள் அவர்களின் அனுமதியின்றி பகிரப்பட்டுள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. எனினும், பல குழந்தைகள் இதுபோன்ற சம்பவங்களை வெளிப்படுத்தாமல் இருப்பதால், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என UNICEF தெரிவித்துள்ளது.
“இந்த அறிக்கை வேதனையான உண்மையை வெளிப்படுத்துகிறது. ஆய்வு செய்யப்பட்ட நாடுகளில் 2 கோடிக்கும் அதிகமான குழந்தைகள், தாங்கள் கற்கும், விளையாடும் மற்றும் நண்பர்களுடன் தொடர்புகொள்ளும் டிஜிட்டல் தளங்களில் விரும்பத்தகாத பாலியல் உள்ளடக்கம் அல்லது சுரண்டலுக்கு உள்ளாகியுள்ளனர்” என UNICEF நிர்வாகப் பணிப்பாளர் கேத்தரின் ரஸ்ஸல் தெரிவித்துள்ளார்.
ஆய்வு செய்யப்பட்ட சம்பவங்களில் சுமார் 60 சதவீதம் Facebook, Instagram, Snapchat, TikTok மற்றும் WhatsApp உள்ளிட்ட சமூக ஊடகத் தளங்களில் இடம்பெற்றுள்ளன. மேலும், 14 சதவீத சம்பவங்கள் இணையவழி விளையாட்டுகளில் இடம்பெற்றுள்ளன.
குழந்தைகள் ஏற்கனவே அறிந்த நபர்களே பல சம்பவங்களுக்குப் பின்னால் இருந்துள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. ஆய்வு செய்யப்பட்ட சம்பவங்களில் 57 சதவீதம் நண்பர்கள், சக மாணவர்கள், காதல் துணைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட குழந்தைகளுக்கு தெரிந்த நபர்களுடன் தொடர்புடையவை.
அதேவேளை, 38 சதவீத குழந்தைகள் தங்களை துஷ்பிரயோகம் செய்த நபரை முதன்முதலில் இணையத்திலேயே சந்தித்துள்ளனர். போலியான கணக்குகள் மற்றும் தனிப்பட்ட செய்தி அனுப்பும் வசதிகள் போன்றவை துஷ்பிரயோகத்தை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பம் ஊடாக இடம்பெறும் பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம் குழந்தைகளின் மனநலம், பாதுகாப்பு உணர்வு மற்றும் பிறரை நம்பும் தன்மை ஆகியவற்றில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக UNICEF தெரிவித்துள்ளது.
இத்தகைய துஷ்பிரயோகத்தை எதிர்கொண்ட குழந்தைகள், தற்கொலை எண்ணங்கள் அல்லது நடத்தைகள் மற்றும் சுயதீங்கு போன்றவற்றை எதிர்கொள்ளும் வாய்ப்பு நான்கு மடங்கு அதிகமாக இருந்ததுடன், பதற்ற நிலையும் அதிகமாக காணப்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும், 40 சதவீதத்திற்கும் அதிகமான சம்பவங்கள் எவரிடமும் தெரிவிக்கப்படவில்லை. காவல்துறை, சமூக சேவையாளர்கள் அல்லது உதவி அழைப்புச் சேவைகள் போன்ற அதிகாரிகளிடம் 1 சதவீதத்திற்கும் குறைவான சம்பவங்களே அறிவிக்கப்பட்டுள்ளன.
குழந்தைகள் மௌனம் காப்பதற்கான முக்கிய காரணமாக, உதவி பெறுவதற்கு யாரை அணுகுவது அல்லது எங்கு செல்வது என்பது தெரியாமை குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தைகளை இணையவழி துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாப்பதற்காக அரசாங்கங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் ஏனைய தரப்புகள் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என UNICEF வலியுறுத்தியுள்ளது.
குழந்தைகளுக்கான பாதுகாப்பான டிஜிட்டல் தளங்களை உருவாக்குதல், வலுவான தனியுரிமைப் பாதுகாப்புகளை உறுதி செய்தல், பெரியவர்களிடமிருந்து வரும் தேவையற்ற தொடர்புகளை கட்டுப்படுத்துதல், துஷ்பிரயோகங்களை விரைவாகக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்தல், சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
அத்துடன், குழந்தைகள் நம்பிக்கையுடன் புகார் அளிக்கக்கூடிய மற்றும் தேவையான ஆதரவைப் பெறக்கூடிய பாதுகாப்பான முறைமைகளை உருவாக்குவதுடன், துஷ்பிரயோகத்தை எதிர்கொள்ளும் குழந்தைகளின் மீது பாதுகாப்புப் பொறுப்பை சுமத்தாமல், குடும்பங்கள், பாடசாலைகள் மற்றும் சமூகங்கள் அவர்களுக்கு ஆதரவாகச் செயற்பட வேண்டும் எனவும் UNICEF வலியுறுத்தியுள்ளது.
“அரசாங்கங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட நாம் அனைவரும், இணையத்தில் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என UNICEF நிர்வாகப் பணிப்பாளர் கேத்தரின் ரஸ்ஸல் தெரிவித்துள்ளார்.









