இலங்கை போக்குவரத்து பொலிஸாரின் பெயரைப் பயன்படுத்தி, போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை இணையவழியில் செலுத்துமாறு கோரும் போலியான குறுஞ்செய்திகள் தொடர்பில் சாரதிகளை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் செனதீர, இவ்வாறான மோசடி குறுஞ்செய்திகள் தற்போது பரவி வருவதாக தெரிவித்துள்ளார்.
குறித்த செய்திகளில், பெறுநர் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட காலத்திற்குள் இணையவழியில் அபராதத்தை செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில நாட்களுக்குள் அபராதம் செலுத்தப்படாவிட்டால் அபராதத் தொகை அதிகரிக்கப்படும் என்றும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறித்த போலிச் செய்திகளில் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மோசடியான இணையத்தளங்களுக்கான இணைப்புகள் அனுப்பப்பட்டு, அவற்றில் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி அட்டை விபரங்களை உள்ளிடுமாறு பெறுநர்கள் கோரப்படுகின்றனர்.
இவ்வாறான இணைப்புகள் மூலம் தங்களது வங்கி விபரங்களை உள்ளிட்டு, பின்னர் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை இழந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் செனதீர தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து பொலிஸார், போக்குவரத்து அபராதங்களை செலுத்துவதற்காக எந்தவொரு இணையத்தளத்திற்கும் இணைப்புகளை அனுப்புவதில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது போக்குவரத்து அபராதங்களை இணையவழியில் செலுத்துவதற்கான அங்கீகரிக்கப்பட்ட ஒரே வழிமுறை GovPay எனவும், சம்பந்தப்பட்ட போக்குவரத்து விதிமீறல் தொடர்பில் பொலிஸ் அதிகாரியால் வழங்கப்படும் தகவல்களைப் பயன்படுத்தியே அதன்மூலம் பணம் செலுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“இலங்கை போக்குவரத்து பொலிஸாரால் அனுப்பப்படும் போக்குவரத்து அபராதங்களை செலுத்துவதற்கென தனியான இணையத்தளம் எதுவும் இல்லை” என செனதீர குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைத் திறக்க வேண்டாம் என்றும், வங்கி விபரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட மற்றும் இரகசிய தகவல்களை எவரிடமும் பகிர வேண்டாம் என்றும் பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
இவ்வாறான மோசடிக்கு ஏற்கனவே இலக்காகியவர்கள், மேலதிக விசாரணைகளுக்காக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உடனடியாக பணம் செலுத்துமாறு கோரி இணைப்புகளுடன் அனுப்பப்படும் அடையாளம் தெரியாத குறுஞ்செய்திகளை புறக்கணிக்குமாறும் சாரதிகளிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.









