தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவில் 16 வயதுடைய கடல் சிங்கம் ஒன்று புற்றுநோய்க்கான சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், தற்போது படிப்படியாக குணமடைந்து வருவதாக தேசிய விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
‘போம்’ (Bom) என அழைக்கப்படும் குறித்த கடல் சிங்கம் நீண்ட காலமாக ஆறாத காயத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பூங்காவின் கால்நடை வைத்தியக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அந்தக் காயம் புற்றுநோயுடன் தொடர்புடையது என கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சிகிச்சைக்கான சாத்தியமான வழிமுறைகள் குறித்து உள்நாட்டு கால்நடை வைத்தியர்கள் மற்றும் வெளிநாட்டு நிபுணர்களிடம் ஆலோசனை பெறப்பட்டது.
இதேபோன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகும் சில விலங்குகளை சில சந்தர்ப்பங்களில் கருணைக்கொலை செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம் என்ற போதிலும், போமை காப்பாற்றுவதற்கான மாற்று சிகிச்சை முறைகளை ஆராய பூங்கா அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இதற்கமைய, தேவையான சத்திரசிகிச்சையை மேற்கொள்ளக்கூடிய நிபுணர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், அவர்களுடன் தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் கால்நடை வைத்தியர்கள் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழக நிபுணர்கள் இணைந்து சத்திரசிகிச்சையை மேற்கொள்ள தீர்மானித்தனர்.
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர், மிருகக்காட்சிசாலையின் விலங்கு வைத்தியசாலையில் இந்த சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது போம் படிப்படியாக குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“விலங்கு படிப்படியாக குணமடைந்து வருகிறது. அது முழுமையாக குணமடைந்த பின்னர் மீண்டும் கடல் சிங்கக் காட்சிப் பகுதியில் பார்வையாளர்களுக்காக காட்சிப்படுத்த முடியும் என நம்புகிறோம்” என சந்தன ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தற்போது போம் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவில்லை. கால்நடை வைத்தியக் குழுவினர் அதன் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை வழங்கி வருகின்றனர்.
போம் மீண்டும் பொதுமக்களின் பார்வைக்கு கொண்டுவரப்படும் திகதியைத் துல்லியமாக குறிப்பிட முடியாது என தெரிவித்த அவர், விலங்கின் உடல்நிலை போதுமான அளவு முன்னேற்றமடைந்ததும் அது சாத்தியமாகும் என நம்பிக்கை வெளியிட்டார்.
சுமார் 16 வயதுடைய போம், வயது முதிர்ந்த கடல் சிங்கமாக கருதப்படுவதாகவும், இவ்வகை விலங்குகளின் சராசரி ஆயுட்காலம் சுமார் 20 ஆண்டுகள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மிருகக்காட்சிசாலைகளில் விலங்குகளை வைத்திருப்பது தொடர்பான விமர்சனங்களுக்கு பதிலளித்த சந்தன ராஜபக்ஷ, தேசிய விலங்கியல் பூங்கா விலங்குகளின் நலன், பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்தார்.
மேலும், பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு அதன் வசதிகளுக்கு உட்பட்ட வகையில் அதிகபட்ச இடவசதியும் தேவையான பராமரிப்பும் வழங்கப்படுவதாகவும், அரிய வகை உயிரினங்களைப் பாதுகாப்பதிலும், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விலங்குகள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பில் அறிவை வழங்குவதிலும் மிருகக்காட்சிசாலை முக்கிய பங்காற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.









